Friday, June 17, 2005

கருவிலேயே கொல்லுங்கள் பெண்குழந்தையை

ஜூனியர் விகடனைத் திருப்பிக் கொண்டிருந்த போது "குழந்தையின் கண் எதிரே அடித்துக் கொல்லப்பட்ட பல்கீஸ்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. வலைப்பதிவுகளில் சிலரும் அதிர்ச்சி தெரிவித்திருந்ததைப் பார்த்தேன்.

இதில் அதிர்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது? நகரப்புற மக்கள் டீசாண்டாக செய்யும் வேலையை அந்த கிராமத்தான் எல்லை மீறி மூர்க்கமாக செய்திருக்கிறான். Fundamentally everything is same in village and city (sorry for my bad english). கல்வி வளர்ந்திருக்கிறது என்கிறோம். மக்கள் நாகரீகம் வளர்ந்திருக்கிறது என்கிறோம். இன்னமும் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்த ஒரு நிமிட தடுமாற்றமும் இல்லாமல் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு நிமிட அஜீரண கோளாறு இல்லாமல் போய்விட்டதா? ஒரு நிமிடம் என்பதை அதிகுறைந்த பட்ச எல்லையாகக் கூறுகிறேன். அதிகபட்ச எல்லை எந்த லிமிட்டையும் தாண்டிப் போகுலாம்.

வயிற்றில் இருக்கும் போது சிசுவை ஸ்கேன் செய்து பார்ப்பது குற்றம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறதாம். எதோ மக்களுக்கு நல்லது செய்கிறதென அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை விட பெண் சிசுவை விருப்பப்படாதவர்கள் கருவிலேயே கொல்லலாமென ஆணையிடலாம். விருப்பப்பட்டவர்கள் பெண் குழந்தையை வைத்துக் கொள்ளட்டும். விருப்பப்படாதவர்கள் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கட்டும். விருப்படாதவர்கள் பெண் குழந்தையை பெற்றெடுத்து தாயையும் குழந்தையையும் வார்த்தைகளாலும், ஆயுதங்களாலும், விஷத்தாலும், கள்ளிப்பாலாலும் கொல்லுவதை விட தான் உயிருடன் இருக்கிறோம் என்று புவியின் காற்றை சுவாசித்து உணரும் முன்னமேயே கொன்றுவிடலாம்.

எல்லாரும் இப்படித்தான் என்று சொல்லவரவில்லை. 50%-50%யாக நான் உணருகிறேன். எந்த குழந்தையா இருந்தா என்ன? என்று பகட்டாக சொல்பவர்களும், உண்மையான மனதுடன் சொல்பவர்களாக இருந்தாலும் சரி பெண் குழந்தை என்றவுடன் அந்த ஒரு நிமிட தடுமாற்றம் என்பது இருக்கத்தான் செய்கிறது(என்னை சுற்றிய வாழ்க்கையில் கண்ட மக்களிடமிருந்து).

ஆண் குழந்தை பிறந்தால் இவர் தலைநிமிர்ந்து நடப்பாராம். கடைசி காலத்தில் கொள்ளிப் போட ஆண் மகன் கிடைத்தால் சந்தோஷமாம். சொத்துக்களை கட்டிக்காக்க ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவாராம். அவனே வளர்ந்து பொறுக்கியாகி உதாரியாகிப் போனால்.... அவர் என்ன செய்வாராம்? கெட்டு சிரழிந்துப்போறதுகள் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தான்.

செத்த பிறகு ஆண்பிள்ளை கொள்ளி போட்டால் தான் வேகுமாம். செத்தப் பிறகு அவன் பிணமே தவிர ஆண்பிள்ளை கொள்ளியிட்டால் வேகும், பெண்பிள்ளை கொள்ளியிட்டால் வேகாது என்பதெல்லாம் யார் ஏற்படுத்தி வைத்த சித்தாந்தங்களோ?

அச்சசோ! இப்படியும் நடக்கிறதா? என்று ஜீனியர் விகடன் செய்திக்காக வருத்தப்படும் நாம் இன்னமும் படித்த சில வீடுகளில் இதைவிட எவ்வளவோ நடக்கிறது என்பதை அறிவீர்களா? மாமியர் முதல் சுற்றம் வரை ஜாடைமாடையாக பேசி நாவால் தீண்டி அந்த பெண்ணை கொல்வதை விட முகமது ரபீக் செய்தது போல பல்கீஸ்களை ஒரேடியாக கொன்று போட்டுவிடுவதே நல்லது.

அடிப்படையில் எதோ பிரச்சனை?

என்னை சூழ்ந்துள்ள நண்பிகள் குலாமில் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிற விசயங்கள் பல. ஆண் குழந்தை பெற்றுக்கொண்டவள் அடித்துக் கொள்ளும் தம்பட்டம் "ம்ம்ம்ம்... பொண்ணா பொறந்தா இவனுக்கு பூ வச்சி அழகுபார்க்கலாம். இவனுக்கு என்ன பண்ண முடியும்" என்று தன் மகனை எல்லோர் முன்னிலையிலும் செல்லமாக கடிந்துக் கொள்கிறாளாம். பெண் குழந்தைப் பெற்ற என் தோழி கவலையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அவளுக்கு மாமியார் வீட்டில் ஒரே டார்ச்சர். அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று சாடைமாடையாக மாமியார் நாளைக்கு 300 தடவை சொல்லிக் காட்டுகிறாராம். அடுத்தக் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே தயங்கிக் கொண்டிருக்கிறாள். அடுத்து ஆண் குழந்தை பிறந்தால் கொடுத்து வைத்தவள். அடுத்து பெண் குழந்தை பிறந்தால் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்தவள். எப்படி இருவரையும் கரையேத்தப் போகிறேன் என்ற வருத்தம்.

என் வீட்டிலும் பிரச்சனை எப்போதோ ஆரம்பித்து விட்டது. அது பிரச்சனை என தெரியாமல் சுழன்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மாமியாரும் சரி கணவரும் சரி பெண் குழந்தை பிறந்தாலும் சந்தோசம், ஆண் குழந்தைப் பிறந்தாலும் ****ரொம்ப**** சந்தோசம் என்ற ஜாடையில் தான் பேச்சு இருக்கிறது. திருமணமாகி சில வருடங்களில் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஓங்கிவிட்டது. இப்ப்போதெல்லாம் ஒவ்வொரு தடவை வீட்டுக்கு விலக்காகும் போது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இருந்தும், ஏமாற்றம் மிஞ்சும் போது ஏற்படும் வருத்தத்தை விட, சுற்றத்தார்கள் சொல்லி காண்பிக்கும் சொற்கள் தான் என்னை தைக்கின்றன. விலக்காகும் போது மௌனமாக நான் அழும் அழுகைகளும், அழுகையால் நனையும் தலகாணிகளுமே சாட்சி.குழந்தை பிறந்தால் என்ன குழந்தை என்ற பிரச்சனையாகும்? நானும் ஒரு பெண்தானே.

13 Comments:

Blogger மதுரை மல்லி said...

சௌந்தர்

நான் உலகம் அதிகம் அறியாதவள். மதுரையில் என்னை சூழ்ந்திருக்கிற வாழ்க்கையில் பார்க்கும் மக்களை வைத்தே எழுதியிருக்கிறேன். அதான் 50%-50% என்கிறேனே.அமெரிக்காவில் எப்படியோ எனக்கு தெரியாது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரையில் இன்னும் இதை பிரச்சனையாக பார்க்கிறேன்.

8:52 AM  
Blogger NambikkaiRAMA said...

மதுரை மல்லி பெண்சிசுக்கொளை குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானதே. இதற்கு முழுமுதற்காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான். பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றவன் ஆணா பெண்ணா என்பதைப்பற்றி கவலைப்பட மாட்டான். இந்தியா எப்போது பொருளாதாரத்தில் தன்னிறைவு(ஒவ்வொரு தனிமனிதனுக்கும்) பெறுவது ..அப்போது நம் மக்களின் சிந்தனை ஆணும் பெண்ணும் சரிசமமே என்று எண்ணுவது..அதுதான் எனது கவலை..

9:41 AM  
Blogger துளசி கோபால் said...

ம.ம,

கவலைப்படாதீர்கள். உங்க உணர்வு எனக்குப் புரியுது!

பொண்ணுக்கும் பையனுக்கும் காரணம் ஆண்களென்னு இந்த சமுதாயம் எப்போ உணரப்போகுதோ?

10:02 AM  
Blogger தாசரதி/Dhasarathy said...

//என் வீட்டிலும் பிரச்சனை எப்போதோ ஆரம்பித்து விட்டது.//

//இப்ப்போதெல்லாம் ஒவ்வொரு தடவை வீட்டுக்கு விலக்காகும் போது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இருந்தும், ஏமாற்றம் மிஞ்சும் போது ஏற்படும் வருத்தத்தை விட, சுற்றத்தார்கள் சொல்லி காண்பிக்கும் சொற்கள் தான் என்னை தைக்கின்றன//


என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், அடுத்த முறை விலக்காகாமல் இருக்கவேண்டுமென்றால் Tension ஆகாமலிருக்க பழகுங்கள்.

குழந்தை பிறந்தபிறகு மற்றவைகளை சமாளிக்கலாம்.

தாசரதி

10:37 AM  
Blogger தகடூர் கோபி(Gopi) said...

//பெண் குழந்தை என்றவுடன் அந்த ஒரு நிமிட தடுமாற்றம் என்பது இருக்கத்தான் செய்கிறது(என்னை சுற்றிய வாழ்க்கையில் கண்ட மக்களிடமிருந்து).//

உங்க வட்டாரத்துல எப்படின்னு தெரியலைங்க..

எங்க குடும்பத்துல/உறவு வட்டத்துல பெண் குழந்தைன்னா ரொம்ப இஷ்டம்.

பெண் குழந்தை பிறந்தா "ஏ! அதிர்ஷ்டசாலிப்பா நீ"ன்னு குழந்தையின் அப்பாவை வாழ்த்துவாங்க.

10:59 AM  
Blogger G.Ragavan said...

பொதுவாக இந்த நிலை மாறி வருகிறது. ஆனாலும் இன்னும் சிலர்.....என்ன சொல்வது....தெய்வம் தன் கடமையைச் செய்யட்டும்.

12:16 PM  
Blogger NONO said...

"மதுரை மண்ணிற்கே உரிய, மற்றுமொறு கொடுமை தெரியுமா? கிராமங்களில், எதுக்கும் உபயோகப் படமாட்டார்கள் என்று நினைத்து வயதான பெரியவர்களையும் இதே போல் தான் எருக்கம் பால் கொடுத்து கொல்வார்கள்." கேக்கவே சங்கடமாய் இருக்கு...

ஆணும் பெண்ணும் சமமே... இதைப்பைற்றி ஏதாவது விழிப்புணர்வு மக்களிடைய உருவாக்க வேண்டியது ஒவ்வோரு மனிதர்களின் தார்மீகக் கடமை

5:22 PM  
Blogger கயல்விழி said...

இன்னும் இந்த நரகம் தொடர்வது வேதனையான விடயம் தான். தங்களது பாலியல் தேவைக்காக துஸ்பிரயோகங்கள் செய்து விட்டு கருக்கலைப்பு செய்வதும் இன்று அதிகரித்து தான் வருகிறது. கருக்கலைப்பு கூட ஒரு உயிர் தான். இதற்கு சரியான விழிப்புணர்வு கொடுக்கப்படவேண்டும். என்ன செய்வது இந்த நூற்றாண்டிலும் இப்படியான விடயங்கள் தொடர்வது. மனக்கஸ்டம். பெண்ணியம் பேசுபவர்கள் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். (ஆமா இறங்கி போராடுறது தான்)

உயிரை பேதமன்றி ஆண் பெண் என்று பார்க்காத நிலை வரவேண்டும். பெண் சிசுக்கொலை அழிய. எப்ப வருமோ?.

6:00 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

மதுரை, தேனி போன்றா இடங்களில் பெண்குழந்தைகள் கொல்ல படுவது உண்மையே. இந கொடுமை சோனா போன்ற நாடுகளிலும் உண்டு. பெண்களாஇ முழுமையாக புரிந்து கொண்டாலும், பெற்றோரை எதிர்க்க துணிவில்லாமல், மன சங்கடப்பட்டு பெரும்பாலான ஆண்கள் வாய்மூடி இருக்கிறார்கள். இந்த பெண் சிசு கொலைக்கு பெரும்பாலான நேரங்களில் மாமியார் வடிவில் உள்ள மற்றொரு பெண்.
அதேபோல குழந்தை பிறக்காமலிருப்பதற்கும் அறிவியல் ரீதியில் பல காரணங்கள் உண்டு

6:17 PM  
Blogger Vijayakumar said...

இந்த பிரச்சனைகளை நானும் நிறைய பார்க்கிறேன். ம்ம்ம்ம்ம்.... என் குடும்பத்தில் பெண் குழந்தையே இல்லையே, வேண்டுமென்று என்று எல்லோரும் தவம் கிடக்கிறார்கள். என் தாயார் எனக்கு தங்கைகள் இல்லை என்று கஷ்டப்படும் தன் தங்கையின் பெண் குழந்தையை சுவீகாரம் எடுப்பது வரைச் சென்றார். சில பல சிக்கல்களினால் முடியாமல் போனது. அதனால் தங்கை பாசம் என அறியாமல் வளர்ந்தவன். இருக்கட்டும் என் ஆட்டோகிராஃப்பில் எழுத நல்ல ஒரு மேட்டர் கிடைத்துவிட்டது. நல்ல பதிவு.

12:16 AM  
Blogger Nagarathinam said...

மதுரை என்ற பெயரை தமிழ் மணத்தில் பார்த்தவுடன் அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். நானும் மதுரைக்காரன் தான் என்பதால்.
உங்கள் கட்டுரையுடன் கருத்து வேறு பாடு இருந்தாலும் ஒரே நகரில் இருக்கிறவர்களை இன்டர்நெட் தமிழ் இணைத்து வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
நாகரத்தினம் சுவாமிநாதன்
பொன்மேனி,மதுரை

1:18 PM  
Blogger Vetri Thirumalai said...

நம்மாளுக பெண் குழந்தைய பார்த்த உடனே அதிர்ச்சி அடைவதற்கு கீழ்வருவன காரண்மென நான் நினைக்கிறேன்.

வயசுக்கு வந்தா சீர் செய்யர செலவு..
கல்யாணம் பண்ணா செலவு...
தலை தீபாவளிண்ணா.......
குழந்தை உண்டான செலவு....
பிரசவ செலவு...
தனிக்குடித்தணம் போனா செலவு...

முதல்ல இந்த வழக்கத்தை மாற்றினால் தான் பெண் சுமை என்ற நினைப்பு போகும். தமிழ்நாட்டில் இன்னும் நிறைய சமூகங்களில் கலியானச்செலவு முழுவதையும் பெண்வீட்டாரின் தலையில் கட்டிவிடும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்பழக்கங்களையெல்லாம் ஒழித்து கட்டினால் தான் மல்லி போன்ற பெண்கள் படும் வேதனைகளை தடுக்க முடியும். எத்தனை ஆண்கள் இதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் என்றோ முடிவெடுத்து விட்டேன் என் வாழ்வில் என்ன பண்ண வேண்டுமென்பதில்.

இதைபற்றி வெகுவிரைவில் ஒரு பதிவு போடலாமென்றால் நேரம் தான் அமையமாட்டீங்குது.

3:41 PM  
Blogger மதுரை மல்லி said...

வாசகர்களே மன்னிக்கனும்.

உங்கள் கருத்துக்களை எல்லாம் படித்தேன்.உங்களுடன் விவாதிக்க ஆசை. என்னால் அதிக நேரம் இணையத்தில் செலவழிக்க முடியாது. தமிழில் டைப் செய்வது வேறு முக்கி முக்கி தட்டு தடுமாறி ஒரு கட்டுரையை அடித்து முடிக்க ஒரு வாரம் ஆகிறது. கருத்து சொன்ன எல்லாருக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது, எல்லோருக்கும் என் பதில் கட்டாயம் உண்டு.

6:40 PM  

Post a Comment

<< Home