Wednesday, June 22, 2005

ஓடிப்போனவள் எழுதுகிறேன்

அன்புள்ள சுகுமாரனுக்கு,

என்னுள் எப்படி இந்த எண்ணம் தோன்றியது எனத் தெரியவில்லை. என்னுடைய உணர்வுகள் என்னை மீறிப் போய்விட்டன. உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோனோ என தினம் தினம் நினைத்து சாகிறேன்.உயிரோடு இருக்கும் வரை எதையாவது நினைத்து நினைத்து சாவது தான் என்னைப் போன்ற பெண்களுக்கு அளிக்கப்பட்ட சாபக்கேடோ? உங்களை நான் கல்யாணம் செய்துக் கொள்வதற்கு முன் உணர்வுகளால் என் பெற்றோர்கள் சாகடித்தார்கள். உங்களை கல்யாணம் செய்துக் கொண்ட பின் பிரிவு உணர்வால் நான் செத்துப் போனேன். இப்போது இந்த துரோக உணர்வால் செத்துப் போகிறேன்.

என்னை மணந்துக் கொண்ட ஒரே மாதத்தில் என்னை விட்டு பிரிந்து துபாய் சென்றவர் தான் நீங்கள். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஆகிறது. என்னை விட்டு நீங்கள் பிரிந்துச் சென்ற அன்று முதல் உணர்வுகள் அற்ற மரக்கட்டையாக என்னால் இருக்க முடியவில்லை. நானும் அன்பைத் தேடுனேன் என் தாய் தந்தையரிடம். அன்பு என்பதை விட கட்டுப்பாடு என்ற அன்பால் பெட்டிப் பாம்பாக வளர்க்கப்பட்டேன். பூப்பெய்தியதும் வீட்டில் சிறை வைக்கப்பட்டேன். வேளாவேளைக்கு சோறு கிடைத்தது. படிக்க குமுதம் கல்கண்டு, விகடன் கிடைத்தது. பாசமிகு பரிவு கிடைத்தது,சிறையின் பறவையாக வீடே கதி எனக் கிடந்தேன். எல்லாம் கிடைத்தது. சுதந்திரம் என்பதை தவிர. அதிகப்பட்ச சுதந்திரம் குடும்பத்துடன் திரையரங்கு செல்வது மட்டுமே. என் அப்பாவுக்கு வளரும் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டுமென அவருக்கு அவரே விதித்துக் கொண்ட விதிகள் தெரியாமல் என் மீது விழுந்தது என் துரதிர்ஷ்டமே.

நான் நேற்றே உங்கள் வீட்டிலிருந்து ஓடிப் போய்விட்டேன். துரோக உணர்வு என்னை குத்திட்டியாக குத்திக் கிழிக்க என் கண்ணீரை அடக்க முடியவில்லை. நான் செய்தது தவறா? சரியா? என்று உணரும் வயதில் கூட நான் இல்லையோ என்று நினைக்கிறேன். என்னை அடக்கி அடக்கி வைத்தவர்களால் என் மன உணர்வுகளையும், என் உடல் உணர்வுகளையும் அடக்கி வைக்க மறந்துவிட்டார்களே.

நான் சந்தோசமாக இருந்தது நம் திருமண நாளில் மட்டுமே. என்று மேஜர் ஆவேனோ என காத்திருந்த என் தந்தை எனக்கு பதினெட்டு வயதாகி இரண்டு நாட்களில் வரன் தேட ஆரம்பித்தர். ஜடமாகிய எனக்கு காதல் தெரியாது, கவிதை தெரியாது,உணர்வுகள் கிடையாது. ஏன் என்னை மணந்துக் கொள்ள நினைத்தீர்களோ எனத் தெரியவில்லை? என்னை ஜடமாகவே வீட்டில் வளர விட்டிருக்கலாம். துபாயில் நீங்கள் வேலைப் பார்க்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக என் தந்தை உங்கள் வரனுக்காக தலைகீழாக நின்றார். வென்றார்.

ஒரு நாள் என்னிடம் வந்து புகைப்படத்தை காண்பித்து என்னை மணந்துக் கொள்ள போகிறவர் என்று சொன்னார்.துபாயில் நீங்கள் வேலைச் செய்வதாகச் சொன்னார். உங்கள் படத்தை பார்த்த பிறகும் என்னில் ஒரு உணர்ச்சியும் இல்லை. அடிமை வாழ்வில் வாழ்ந்து வாழ்ந்து சுகம் கண்டவளுக்கு எங்கு அடிமையாய் இருந்தால் என்ன? ஒரே உணர்வு தான். "பிடிச்சிருக்கு தானே" என்றார் என் அப்பா. "பிடிச்சிருக்கு" என்ற என் உதடு உண்மையில் பிடிச்சிருக்கு என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைக் கூட என் மனம் அறிந்துக் கொள்ளவில்லை. மேலும் அப்பா நீங்கள் பொறுப்பான பிள்ளை எனவும், உங்கள் குடும்பத்தில் இருந்த அனைத்துக் கடன்களையும் நீங்கள் தான் அடைத்தீர்கள் என்றும், நீங்கள் வெளிநாட்டில் வாழ்வதால் என்னை சொத்தோடும் சுகத்தோடும் வைத்திருப்பார் என்று என்னிடம் சொன்னார்.

அன்று நிகழ்ந்தது என்னில் ஒரு எதிர்பார்ப்பு. துபாய், எனக்கு நிம்மதியளிக்கலாமென எதிர்பார்க்க தூண்டியது.இந்த ஜடத்துக்கும் உங்களுடன் திருமணம் நடந்தது. என்னவென்று அறியாத சில உணர்வுகளை மட்டும் தட்டி தட்டி முதலிரவென்ற பெயரில் எழுப்பினீர்கள். செத்துப் போனவளுக்கு உணர்வுகள் வந்தது. காதல் என்றால் என்னவென்று புரிந்தது. ஆணின் ஸ்பரிசம் என்ன என்று புரிந்தது. எனக்கு உங்களை அரவணைக்க தோன்றியது. காலமெல்லாம் உங்களுடன் வாழவேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. நேசமாக இருந்தோம். மனம் போன போக்கில் பேசித் திரிந்தோம். எனக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். அப்படியே இடியையும் என் தலையில் சேர்த்து இறக்கினீர்கள். தூபாய்க்கு என்னை அழைத்துச் செல்ல முடியாது என்றீர்கள். ஏதோ விசா பிரச்சனை என்றீர்கள்.

அடிமை வாழ்வில் உழன்ற எனக்கு உங்கள் அடிமையாக உங்கள் நினைவுடனே வாழ எத்தனிக்க துணிந்தேன். நீங்கள் துபாய்க்கு கிளம்பும் முன் நாம் இருவரும் கட்டிக் கொண்டு அழுதோம். உங்கள் நினைவுடனே வாழலாம் என்று நினைத்தேன். "துபாய்க்கு போய் தான் கட்டாயம் சம்பாதிக்க வேண்டுமா?" என்றேன். நீங்களும் "அடச்சீ அசடே! துபாயில் நான் தொழிலில் கைத்தேர்ந்தவனாகி வருகிறேன். பாதியில் விட்டு வர மனமில்லை. நான் அங்கு விரைவில் தொழில் தொடங்கிவிட்டால் உன்னை தான் உடனே கூட்டிச் செல்வேன். அதைவிட்டு விட்டு இங்கே வந்தால் எல்லாம் வீணாகி விடும்" என்று சமாதனம் சொன்னீர்கள்.

சுதந்திரம் என்ற பார்வையை குருடனுக்கு ஒரு மாதம் கொடுத்துவிட்டு மீண்டும் பறிக்கப்பட்டது. வாரம் ஒரு முறை உங்கள் பேச்சுக்காக தவம் கிடந்தேன். மெல்ல மெல்ல உங்கள் வீட்டில் குத்தல் பேச்சுகளும், வசைகளும், ஏச்சு பேச்சுகளும் என்னை சூழ ஆரம்பித்தன. என் வீட்டில் சுதந்திரம் என்ற பெயர் இருந்தாலும் கட்டுபாடுற்ற அன்பு கிடைத்தது. உங்கள் வீட்டில் எனக்கு அதுவும் பறிபோனது. மரக்கட்டையாக இருந்தவளின் செக்ஸ் உணர்ச்சியை திறந்துவிட்டப் பிறகு வடிகால் இல்லாமல் தேக்கமுற்றேன். என்னால் எதை தாங்கிக் கொள்வது எனத் தெரியவில்லை? இயந்திரமாக கண் முழிக்கிறேன். இயந்திரமாக உங்கள் வீட்டு வேலைகளை செய்கிறேன். இயந்திரமாக வசைகளை காதில் போட்டுக் கொள்கிறேன். என் மனது மட்டும் அன்புக்காக ஏங்குகிறது.

லாரி லோடு அடிக்கும் முருகன் உங்கள் வீட்டுக்கு வர என்னில் எப்படி அந்த ஒரு எண்ணம் வளர்ந்தது எனத் தெரியவில்லை. உங்கள் அம்மாவின் ஏச்சும் முருகனின் முன்னால் அரங்கேறும். பாவப்பட்டார். யாரும் இல்லாத நேரத்தில் பரிந்துப் பேசி ஆறுதல் அளித்தார். ஏறக்குறைய இரண்டு வருடம்... இரண்டு வருடம் உங்களுக்காக காத்து வந்தேன். என் உணர்வுகளை கட்டி இழுத்து வைத்திருந்தேன். உங்கள் அன்பு மட்டும் வேண்டிமென்றிருந்தேன். அந்த அழுத்தங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் உடைகிறேன். உடைந்த மனது தானாக அன்பு செலுத்திய முருகனை நோக்கி ஓடுகிறது.

ஆண்பிள்ளை உங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் வேலையிருக்கும். ஆயிரம் வேலைகளிலும் மனம் ஒன்றி வேலைப்பார்க்க முடியும். பத்து இடங்களுக்கு ஒரு நாளைக்கு செல்வீர்கள். ஆனால் பெண்ணாக பிறந்து தொலைத்த எனக்கு எதில் என் மனதை செலுத்துவது. வீட்டு வேலைக்கும் குத்தல் பேச்சிக்கும் சகித்துக் கொண்டு வாழப் பிறந்தவள் தான் நான். என்னை அறியாமல் என் மனது சுதந்திரமும் கேட்கிறதே.

தெரியாமல் ஒரு நாள் அடுத்த தெருவில் இருக்கும் முருகன் வீட்டுக்குச் சென்று அழுதேன். பாவம் அவர் தான் என்ன செய்வார்? அல்லால்படும் என் மனதை அறிந்து எனக்கு ஆறுதல் அளித்தார். என் மனது வெறித்தனமாக அவன் அடிமையாக இருக்க கூவியது. அவனிடம் எனக்கு விடுதலை அளிக்கும்படி கெஞ்சினேன். அப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. நம் வீட்டின் குடும்ப கவுரவம், எனக்கு இருக்கும் திருமண அந்தஸ்து என்று எதுவுமே தெரியவில்லை. என் உணர்வுகளே விஞ்சி நின்றது. மனம் வரட்டுத்தனமாக சுதந்திரம் சுதந்திரம் என்றாலும் முருகனிடம் அடிமையாக இருக்குத் தூண்டியது. ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தீர்க்கமாக சிந்திப்பவர், என்னை மாதிரி உணர்வுகளால் முளை மளுங்கடிப்பட்டவர் இல்லை அவர்.

பின் விளைவுகள் யோசிக்காமல் இன்று வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன். எனக்கு இந்த நேரம் ஓடிப்போனவள் என்ற பட்டம் கிடைத்திருக்கும். சுதந்திரம் தேடி பெண் சென்றால் 'ஓடி போனவள்' என்று தானே அர்த்தம். என் தாய் தந்தையர் தூக்கில் தொங்கவும் தயாராகி இருப்பர். இன்னும் நான் முருகனை சென்றுப் பார்க்கவில்லை. இப்போது என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை. கையில் இருந்த சொச்ச காசுகளுடன் சென்னையில் இருக்கும் லாட்ஜிலிருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் வாழ்க்கை என்னவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதற்கு காரணம் நான் பெண்ணாக பிறந்ததா? அடிமையாக வாழ்ந்ததா? எனக்கு தெரியவில்லை.

என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள். என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள்.எனக்கு எதாவது எனக்கு நிகழும் முன்னே என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள்.

கண்ணீருடன்,
அமுதா

(அக்கம் பக்கத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை தழுவி எழுதப்பட்ட கதை)

Friday, June 17, 2005

கருவிலேயே கொல்லுங்கள் பெண்குழந்தையை

ஜூனியர் விகடனைத் திருப்பிக் கொண்டிருந்த போது "குழந்தையின் கண் எதிரே அடித்துக் கொல்லப்பட்ட பல்கீஸ்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. வலைப்பதிவுகளில் சிலரும் அதிர்ச்சி தெரிவித்திருந்ததைப் பார்த்தேன்.

இதில் அதிர்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது? நகரப்புற மக்கள் டீசாண்டாக செய்யும் வேலையை அந்த கிராமத்தான் எல்லை மீறி மூர்க்கமாக செய்திருக்கிறான். Fundamentally everything is same in village and city (sorry for my bad english). கல்வி வளர்ந்திருக்கிறது என்கிறோம். மக்கள் நாகரீகம் வளர்ந்திருக்கிறது என்கிறோம். இன்னமும் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்த ஒரு நிமிட தடுமாற்றமும் இல்லாமல் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு நிமிட அஜீரண கோளாறு இல்லாமல் போய்விட்டதா? ஒரு நிமிடம் என்பதை அதிகுறைந்த பட்ச எல்லையாகக் கூறுகிறேன். அதிகபட்ச எல்லை எந்த லிமிட்டையும் தாண்டிப் போகுலாம்.

வயிற்றில் இருக்கும் போது சிசுவை ஸ்கேன் செய்து பார்ப்பது குற்றம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறதாம். எதோ மக்களுக்கு நல்லது செய்கிறதென அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை விட பெண் சிசுவை விருப்பப்படாதவர்கள் கருவிலேயே கொல்லலாமென ஆணையிடலாம். விருப்பப்பட்டவர்கள் பெண் குழந்தையை வைத்துக் கொள்ளட்டும். விருப்பப்படாதவர்கள் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கட்டும். விருப்படாதவர்கள் பெண் குழந்தையை பெற்றெடுத்து தாயையும் குழந்தையையும் வார்த்தைகளாலும், ஆயுதங்களாலும், விஷத்தாலும், கள்ளிப்பாலாலும் கொல்லுவதை விட தான் உயிருடன் இருக்கிறோம் என்று புவியின் காற்றை சுவாசித்து உணரும் முன்னமேயே கொன்றுவிடலாம்.

எல்லாரும் இப்படித்தான் என்று சொல்லவரவில்லை. 50%-50%யாக நான் உணருகிறேன். எந்த குழந்தையா இருந்தா என்ன? என்று பகட்டாக சொல்பவர்களும், உண்மையான மனதுடன் சொல்பவர்களாக இருந்தாலும் சரி பெண் குழந்தை என்றவுடன் அந்த ஒரு நிமிட தடுமாற்றம் என்பது இருக்கத்தான் செய்கிறது(என்னை சுற்றிய வாழ்க்கையில் கண்ட மக்களிடமிருந்து).

ஆண் குழந்தை பிறந்தால் இவர் தலைநிமிர்ந்து நடப்பாராம். கடைசி காலத்தில் கொள்ளிப் போட ஆண் மகன் கிடைத்தால் சந்தோஷமாம். சொத்துக்களை கட்டிக்காக்க ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவாராம். அவனே வளர்ந்து பொறுக்கியாகி உதாரியாகிப் போனால்.... அவர் என்ன செய்வாராம்? கெட்டு சிரழிந்துப்போறதுகள் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தான்.

செத்த பிறகு ஆண்பிள்ளை கொள்ளி போட்டால் தான் வேகுமாம். செத்தப் பிறகு அவன் பிணமே தவிர ஆண்பிள்ளை கொள்ளியிட்டால் வேகும், பெண்பிள்ளை கொள்ளியிட்டால் வேகாது என்பதெல்லாம் யார் ஏற்படுத்தி வைத்த சித்தாந்தங்களோ?

அச்சசோ! இப்படியும் நடக்கிறதா? என்று ஜீனியர் விகடன் செய்திக்காக வருத்தப்படும் நாம் இன்னமும் படித்த சில வீடுகளில் இதைவிட எவ்வளவோ நடக்கிறது என்பதை அறிவீர்களா? மாமியர் முதல் சுற்றம் வரை ஜாடைமாடையாக பேசி நாவால் தீண்டி அந்த பெண்ணை கொல்வதை விட முகமது ரபீக் செய்தது போல பல்கீஸ்களை ஒரேடியாக கொன்று போட்டுவிடுவதே நல்லது.

அடிப்படையில் எதோ பிரச்சனை?

என்னை சூழ்ந்துள்ள நண்பிகள் குலாமில் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிற விசயங்கள் பல. ஆண் குழந்தை பெற்றுக்கொண்டவள் அடித்துக் கொள்ளும் தம்பட்டம் "ம்ம்ம்ம்... பொண்ணா பொறந்தா இவனுக்கு பூ வச்சி அழகுபார்க்கலாம். இவனுக்கு என்ன பண்ண முடியும்" என்று தன் மகனை எல்லோர் முன்னிலையிலும் செல்லமாக கடிந்துக் கொள்கிறாளாம். பெண் குழந்தைப் பெற்ற என் தோழி கவலையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அவளுக்கு மாமியார் வீட்டில் ஒரே டார்ச்சர். அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று சாடைமாடையாக மாமியார் நாளைக்கு 300 தடவை சொல்லிக் காட்டுகிறாராம். அடுத்தக் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே தயங்கிக் கொண்டிருக்கிறாள். அடுத்து ஆண் குழந்தை பிறந்தால் கொடுத்து வைத்தவள். அடுத்து பெண் குழந்தை பிறந்தால் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்தவள். எப்படி இருவரையும் கரையேத்தப் போகிறேன் என்ற வருத்தம்.

என் வீட்டிலும் பிரச்சனை எப்போதோ ஆரம்பித்து விட்டது. அது பிரச்சனை என தெரியாமல் சுழன்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மாமியாரும் சரி கணவரும் சரி பெண் குழந்தை பிறந்தாலும் சந்தோசம், ஆண் குழந்தைப் பிறந்தாலும் ****ரொம்ப**** சந்தோசம் என்ற ஜாடையில் தான் பேச்சு இருக்கிறது. திருமணமாகி சில வருடங்களில் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஓங்கிவிட்டது. இப்ப்போதெல்லாம் ஒவ்வொரு தடவை வீட்டுக்கு விலக்காகும் போது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இருந்தும், ஏமாற்றம் மிஞ்சும் போது ஏற்படும் வருத்தத்தை விட, சுற்றத்தார்கள் சொல்லி காண்பிக்கும் சொற்கள் தான் என்னை தைக்கின்றன. விலக்காகும் போது மௌனமாக நான் அழும் அழுகைகளும், அழுகையால் நனையும் தலகாணிகளுமே சாட்சி.குழந்தை பிறந்தால் என்ன குழந்தை என்ற பிரச்சனையாகும்? நானும் ஒரு பெண்தானே.

Wednesday, June 15, 2005

மார்பு பார்க்கும் கலாச்சாரம்

நல்ல இல்லை நிறைய பேரோட பார்வை நல்லயில்லை. நல்லவேயில்லை. கண்ணை பார்த்து பேசாமல் பெண்ணின் மார்பை பார்த்து பேசும் ஆண்கள் எத்தனை பேர் இங்கே? உங்கள் நெஞ்சையே ஒரு தரம் தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள். கண்ணு தான்னால மார்பை நோக்கி போகுதா? உங்க மேல தப்பில்லை. காரணம் கலாச்சராமுன்னும் அசிங்கமுன்னும் சொல்லிபுட்டு பொண்ணை கையக் காமிச்சது செத்து போனதுகளும் இத்துப் போய் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களும் தான்.

நேற்றைக்கு ஈ.பி பில்லில் நடந்த குளறுபடி விசயமாக ஈ.பி ஆபீஸ் சென்றிருந்தேன். கவுண்டருக்கு பின்னால் இருப்பவர் "என்ன பிரச்சனை?" என்று விட்டு, பில்லில் நிகழ்ந்திருந்த குளறுபடியை நான் சொல்லி முடிவதற்குள் கண்ணை பார்த்து கவனித்துக் கொண்டிருந்தவர் 10 முறையாவது மார்பை நோட்டமிட்டிருப்பார். "முகத்தை பார்த்து பேசுடா" என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் நேரம் எடுத்திருக்காது. எனக்கு தெரியும் இது சொல்லி திருத்த முடியாத பழக்கம். அவர் மனதில் தங்கிப்போன சமூக அழுகளின் மிச்சம்.

சுரனை வரவைக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசும் போது முகத்தை பார்க்காமல் அவர் போட்டிருந்த கால்சட்டையையின் ஜிப்பையே வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தேன். நெளிந்தார். வார்த்தையில் தடுமாறினார். வழிந்தார். அதே உணர்ச்சி+அவமானம் தானே எங்களுக்கும். அவர் திருந்த வேண்டும் என்பது என் ஆசையோ திருத்த வேண்டும் என்பது என் கடமையோ அல்ல.

இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே.

சம்திங் பண்டமெண்டலி ராங்

பண்டமெண்டலி சம்திங் ராங். தாலி கட்டும் சமுதாயத்தின் கயவாளி தனம். அதே நேரம் பெமினிஷம் பேசும் பெண்ணின் பொறுக்கித் தனம்.

திருமணம் என்று பெண்ணுக்கு வேலி போட்டு வைக்கும் சமுதாயத்தில் பொண்ணு பார்க்கும் வைபவம் என்று ஒன்று உண்டாம். அதற்கு முன் பின் தெரியாத என் கணவர் என்ற அந்தஸ்தில் இப்போது சுகம் காண்பவர் வந்தார். அவர் எல்லா சுதந்திரமும் எனக்கு கொடுப்பாராம். என்னை நண்பன் மாதிரி நினைப்பாராம். நான் படித்துக் கொண்டிருந்த மேல் படிப்பை தொடர அனுமதிப்பாராம். பிறகு என் தந்தை பவ்யமாக கரஸ்ஸில் படித்துக் கொண்டே நான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை வந்தவருக்கு பிடித்திருந்தால் நான் அந்த வேலையை தொடருவதாகவும் வந்தவருக்கு பிடிக்காவிட்டால் அவள் வேலைக்கு போக மாட்டாள் என்று சொன்னார். பெத்த கடனுக்காக என்னை படிக்க வைச்ச அப்பா, என்னை அப்படி அடிமையாக்க எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருந்தார். வந்தவருக்கு இன்னும் மனைவி ஆகாத நிலையில் "பையன் ரொம்ப பெருந்தன்மை மிக்கவராம். நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலை பார்க்க அனுமதிப்பாராம்" என் அப்பா சொன்னார். ஸ்டுப்பிடிட்டி. ரெடிகுலஸ். ராங் சம்திங் டோட்டலி ராங் பண்டமெண்டலி ராங்.

"என்ன இருந்தாலும் அவர் எனக்கு தொட்டு தாலிகட்டின புருஷன்டீ" என்று எதை வேண்டுமானாலும் சகித்துக் கொண்டு அடுப்பாங்கரையிலே காலத்தை கழித்த என் அம்மாவிடம் நான் எப்படி வேறுமாதிரியான சுதந்திர சிந்தனையை எதிர்பார்க்க முடியும். என் அம்மாவுக்கு கிடைக்கும் ஒரே சுதந்திரம் அப்பா இல்லாத நேரம் தான். "அவர் வர்றதுக்குள்ளே சமைச்சி முடிக்கனும்டீ, அவர் வர்றதுக்குள்ளே வீட்டை ஒதுங்க வைக்கனும்டீ, அவர் வர்றதுக்குள்ளே கக்கூஸ் போயிட்டு வரணும்டீ" என் அம்மா. அவர் அவரு பெரிய மைசூர் மகராஜா. உண்மையில அவரு மகராஜா தான் அதுக்கு தான் எனக்கு மாப்பிள்ளை வாங்க விலை பேசிக்கிட்டு இருக்காறே.

இதுக்கு பேரு பெமினிஷம்ன்னு நான் நினைக்கலை. அப்படியே இது பெமினிஷமா இருந்தா நானும் பொறுக்கி தான். திருமணம் என்ற புனிதமான பொறுக்கிதனத்துக்கு அடிப்பட்டு போனவள் என்கிறதால நானும் ஒரு பொறுக்கி தான்.

ராங் சம்திங் ராங். சம்திங் பண்டமெண்டலி ராங்.

Monday, June 13, 2005

கள்ளி இவ மதுரை மல்லி

தப்பு தப்பு புத்தியில தப்பு பார்வையில தப்பு பேச்சுல தப்பு செய்கையில தப்பு வாக்குறுதியிலே தப்பு.

தப்பு தப்பு கல்யாணத்தில தப்பு தாம்பத்தியத்துல தப்பு பெத்துகிறதுல தப்பு வளர்க்கிறதுல தப்பு படிக்கிறதுல தப்பு

வம்பு வம்பு தப்புல வம்பு வம்பில தப்பு இதுனால் சீவி விடுறான் அடுத்தவனுக்கு கொம்பு.

தப்பு எங்கே நடந்தாலும் சொல்லி அடிப்பா இந்த மதுரை மல்லி.

புருஷனுக்கு இவ என்னைக்குமே கள்ளி தான் அவனே தப்பான கூட பந்தாடுவ இந்த மதுரை மல்லி.