அன்புள்ள சுகுமாரனுக்கு,
என்னுள் எப்படி இந்த எண்ணம் தோன்றியது எனத் தெரியவில்லை. என்னுடைய உணர்வுகள் என்னை மீறிப் போய்விட்டன. உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோனோ என தினம் தினம் நினைத்து சாகிறேன்.உயிரோடு இருக்கும் வரை எதையாவது நினைத்து நினைத்து சாவது தான் என்னைப் போன்ற பெண்களுக்கு அளிக்கப்பட்ட சாபக்கேடோ? உங்களை நான் கல்யாணம் செய்துக் கொள்வதற்கு முன் உணர்வுகளால் என் பெற்றோர்கள் சாகடித்தார்கள். உங்களை கல்யாணம் செய்துக் கொண்ட பின் பிரிவு உணர்வால் நான் செத்துப் போனேன். இப்போது இந்த துரோக உணர்வால் செத்துப் போகிறேன்.
என்னை மணந்துக் கொண்ட ஒரே மாதத்தில் என்னை விட்டு பிரிந்து துபாய் சென்றவர் தான் நீங்கள். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஆகிறது. என்னை விட்டு நீங்கள் பிரிந்துச் சென்ற அன்று முதல் உணர்வுகள் அற்ற மரக்கட்டையாக என்னால் இருக்க முடியவில்லை. நானும் அன்பைத் தேடுனேன் என் தாய் தந்தையரிடம். அன்பு என்பதை விட கட்டுப்பாடு என்ற அன்பால் பெட்டிப் பாம்பாக வளர்க்கப்பட்டேன். பூப்பெய்தியதும் வீட்டில் சிறை வைக்கப்பட்டேன். வேளாவேளைக்கு சோறு கிடைத்தது. படிக்க குமுதம் கல்கண்டு, விகடன் கிடைத்தது. பாசமிகு பரிவு கிடைத்தது,சிறையின் பறவையாக வீடே கதி எனக் கிடந்தேன். எல்லாம் கிடைத்தது. சுதந்திரம் என்பதை தவிர. அதிகப்பட்ச சுதந்திரம் குடும்பத்துடன் திரையரங்கு செல்வது மட்டுமே. என் அப்பாவுக்கு வளரும் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டுமென அவருக்கு அவரே விதித்துக் கொண்ட விதிகள் தெரியாமல் என் மீது விழுந்தது என் துரதிர்ஷ்டமே.
நான் நேற்றே உங்கள் வீட்டிலிருந்து ஓடிப் போய்விட்டேன். துரோக உணர்வு என்னை குத்திட்டியாக குத்திக் கிழிக்க என் கண்ணீரை அடக்க முடியவில்லை. நான் செய்தது தவறா? சரியா? என்று உணரும் வயதில் கூட நான் இல்லையோ என்று நினைக்கிறேன். என்னை அடக்கி அடக்கி வைத்தவர்களால் என் மன உணர்வுகளையும், என் உடல் உணர்வுகளையும் அடக்கி வைக்க மறந்துவிட்டார்களே.
நான் சந்தோசமாக இருந்தது நம் திருமண நாளில் மட்டுமே. என்று மேஜர் ஆவேனோ என காத்திருந்த என் தந்தை எனக்கு பதினெட்டு வயதாகி இரண்டு நாட்களில் வரன் தேட ஆரம்பித்தர். ஜடமாகிய எனக்கு காதல் தெரியாது, கவிதை தெரியாது,உணர்வுகள் கிடையாது. ஏன் என்னை மணந்துக் கொள்ள நினைத்தீர்களோ எனத் தெரியவில்லை? என்னை ஜடமாகவே வீட்டில் வளர விட்டிருக்கலாம். துபாயில் நீங்கள் வேலைப் பார்க்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக என் தந்தை உங்கள் வரனுக்காக தலைகீழாக நின்றார். வென்றார்.
ஒரு நாள் என்னிடம் வந்து புகைப்படத்தை காண்பித்து என்னை மணந்துக் கொள்ள போகிறவர் என்று சொன்னார்.துபாயில் நீங்கள் வேலைச் செய்வதாகச் சொன்னார். உங்கள் படத்தை பார்த்த பிறகும் என்னில் ஒரு உணர்ச்சியும் இல்லை. அடிமை வாழ்வில் வாழ்ந்து வாழ்ந்து சுகம் கண்டவளுக்கு எங்கு அடிமையாய் இருந்தால் என்ன? ஒரே உணர்வு தான். "பிடிச்சிருக்கு தானே" என்றார் என் அப்பா. "பிடிச்சிருக்கு" என்ற என் உதடு உண்மையில் பிடிச்சிருக்கு என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைக் கூட என் மனம் அறிந்துக் கொள்ளவில்லை. மேலும் அப்பா நீங்கள் பொறுப்பான பிள்ளை எனவும், உங்கள் குடும்பத்தில் இருந்த அனைத்துக் கடன்களையும் நீங்கள் தான் அடைத்தீர்கள் என்றும், நீங்கள் வெளிநாட்டில் வாழ்வதால் என்னை சொத்தோடும் சுகத்தோடும் வைத்திருப்பார் என்று என்னிடம் சொன்னார்.
அன்று நிகழ்ந்தது என்னில் ஒரு எதிர்பார்ப்பு. துபாய், எனக்கு நிம்மதியளிக்கலாமென எதிர்பார்க்க தூண்டியது.இந்த ஜடத்துக்கும் உங்களுடன் திருமணம் நடந்தது. என்னவென்று அறியாத சில உணர்வுகளை மட்டும் தட்டி தட்டி முதலிரவென்ற பெயரில் எழுப்பினீர்கள். செத்துப் போனவளுக்கு உணர்வுகள் வந்தது. காதல் என்றால் என்னவென்று புரிந்தது. ஆணின் ஸ்பரிசம் என்ன என்று புரிந்தது. எனக்கு உங்களை அரவணைக்க தோன்றியது. காலமெல்லாம் உங்களுடன் வாழவேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. நேசமாக இருந்தோம். மனம் போன போக்கில் பேசித் திரிந்தோம். எனக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். அப்படியே இடியையும் என் தலையில் சேர்த்து இறக்கினீர்கள். தூபாய்க்கு என்னை அழைத்துச் செல்ல முடியாது என்றீர்கள். ஏதோ விசா பிரச்சனை என்றீர்கள்.
அடிமை வாழ்வில் உழன்ற எனக்கு உங்கள் அடிமையாக உங்கள் நினைவுடனே வாழ எத்தனிக்க துணிந்தேன். நீங்கள் துபாய்க்கு கிளம்பும் முன் நாம் இருவரும் கட்டிக் கொண்டு அழுதோம். உங்கள் நினைவுடனே வாழலாம் என்று நினைத்தேன். "துபாய்க்கு போய் தான் கட்டாயம் சம்பாதிக்க வேண்டுமா?" என்றேன். நீங்களும் "அடச்சீ அசடே! துபாயில் நான் தொழிலில் கைத்தேர்ந்தவனாகி வருகிறேன். பாதியில் விட்டு வர மனமில்லை. நான் அங்கு விரைவில் தொழில் தொடங்கிவிட்டால் உன்னை தான் உடனே கூட்டிச் செல்வேன். அதைவிட்டு விட்டு இங்கே வந்தால் எல்லாம் வீணாகி விடும்" என்று சமாதனம் சொன்னீர்கள்.
சுதந்திரம் என்ற பார்வையை குருடனுக்கு ஒரு மாதம் கொடுத்துவிட்டு மீண்டும் பறிக்கப்பட்டது. வாரம் ஒரு முறை உங்கள் பேச்சுக்காக தவம் கிடந்தேன். மெல்ல மெல்ல உங்கள் வீட்டில் குத்தல் பேச்சுகளும், வசைகளும், ஏச்சு பேச்சுகளும் என்னை சூழ ஆரம்பித்தன. என் வீட்டில் சுதந்திரம் என்ற பெயர் இருந்தாலும் கட்டுபாடுற்ற அன்பு கிடைத்தது. உங்கள் வீட்டில் எனக்கு அதுவும் பறிபோனது. மரக்கட்டையாக இருந்தவளின் செக்ஸ் உணர்ச்சியை திறந்துவிட்டப் பிறகு வடிகால் இல்லாமல் தேக்கமுற்றேன். என்னால் எதை தாங்கிக் கொள்வது எனத் தெரியவில்லை? இயந்திரமாக கண் முழிக்கிறேன். இயந்திரமாக உங்கள் வீட்டு வேலைகளை செய்கிறேன். இயந்திரமாக வசைகளை காதில் போட்டுக் கொள்கிறேன். என் மனது மட்டும் அன்புக்காக ஏங்குகிறது.
லாரி லோடு அடிக்கும் முருகன் உங்கள் வீட்டுக்கு வர என்னில் எப்படி அந்த ஒரு எண்ணம் வளர்ந்தது எனத் தெரியவில்லை. உங்கள் அம்மாவின் ஏச்சும் முருகனின் முன்னால் அரங்கேறும். பாவப்பட்டார். யாரும் இல்லாத நேரத்தில் பரிந்துப் பேசி ஆறுதல் அளித்தார். ஏறக்குறைய இரண்டு வருடம்... இரண்டு வருடம் உங்களுக்காக காத்து வந்தேன். என் உணர்வுகளை கட்டி இழுத்து வைத்திருந்தேன். உங்கள் அன்பு மட்டும் வேண்டிமென்றிருந்தேன். அந்த அழுத்தங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் உடைகிறேன். உடைந்த மனது தானாக அன்பு செலுத்திய முருகனை நோக்கி ஓடுகிறது.
ஆண்பிள்ளை உங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் வேலையிருக்கும். ஆயிரம் வேலைகளிலும் மனம் ஒன்றி வேலைப்பார்க்க முடியும். பத்து இடங்களுக்கு ஒரு நாளைக்கு செல்வீர்கள். ஆனால் பெண்ணாக பிறந்து தொலைத்த எனக்கு எதில் என் மனதை செலுத்துவது. வீட்டு வேலைக்கும் குத்தல் பேச்சிக்கும் சகித்துக் கொண்டு வாழப் பிறந்தவள் தான் நான். என்னை அறியாமல் என் மனது சுதந்திரமும் கேட்கிறதே.
தெரியாமல் ஒரு நாள் அடுத்த தெருவில் இருக்கும் முருகன் வீட்டுக்குச் சென்று அழுதேன். பாவம் அவர் தான் என்ன செய்வார்? அல்லால்படும் என் மனதை அறிந்து எனக்கு ஆறுதல் அளித்தார். என் மனது வெறித்தனமாக அவன் அடிமையாக இருக்க கூவியது. அவனிடம் எனக்கு விடுதலை அளிக்கும்படி கெஞ்சினேன். அப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. நம் வீட்டின் குடும்ப கவுரவம், எனக்கு இருக்கும் திருமண அந்தஸ்து என்று எதுவுமே தெரியவில்லை. என் உணர்வுகளே விஞ்சி நின்றது. மனம் வரட்டுத்தனமாக சுதந்திரம் சுதந்திரம் என்றாலும் முருகனிடம் அடிமையாக இருக்குத் தூண்டியது. ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தீர்க்கமாக சிந்திப்பவர், என்னை மாதிரி உணர்வுகளால் முளை மளுங்கடிப்பட்டவர் இல்லை அவர்.
பின் விளைவுகள் யோசிக்காமல் இன்று வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன். எனக்கு இந்த நேரம் ஓடிப்போனவள் என்ற பட்டம் கிடைத்திருக்கும். சுதந்திரம் தேடி பெண் சென்றால் 'ஓடி போனவள்' என்று தானே அர்த்தம். என் தாய் தந்தையர் தூக்கில் தொங்கவும் தயாராகி இருப்பர். இன்னும் நான் முருகனை சென்றுப் பார்க்கவில்லை. இப்போது என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை. கையில் இருந்த சொச்ச காசுகளுடன் சென்னையில் இருக்கும் லாட்ஜிலிருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் வாழ்க்கை என்னவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதற்கு காரணம் நான் பெண்ணாக பிறந்ததா? அடிமையாக வாழ்ந்ததா? எனக்கு தெரியவில்லை.
என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள். என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள்.எனக்கு எதாவது எனக்கு நிகழும் முன்னே என்னை உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள்.
கண்ணீருடன்,
அமுதா
(அக்கம் பக்கத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை தழுவி எழுதப்பட்ட கதை)